கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை, 23,077 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 718 பேர் உயிரிழந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவித்துவருகின்றனர்.
அவர்களில் சிலர் தங்களது சொந்த மாநிலத்துக்கு நடந்தே செல்லும் அவலமும் அரங்கேறியுள்ளது. எனவே, அவர்களை தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் புலம்பெயர் மக்களுக்கு அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும். மே 3ஆம் தேதிக்கு பிறகு அவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல ரயில்களையும் பேருந்துகளையும் அரசு அனுமதிக்க வேண்டும்.
வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாள்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடக்க யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் ஒரே மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாழ் போட்டு எத்தனை நாள்களுக்கு அடைக்க முடியும்? " என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவிடம் கற்க வேண்டிய பாடம் என்ன?... பிரதமர் மோடி