உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 179 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 48 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று உறுதிசெய்துள்ளது.
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ் ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகி, கடந்த 10 நாள்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 194 பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிற மாநில அரசுகள் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேற்று இரவு நேரில் சென்று முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வுசெய்தார். முதலாவதாக, நகரின் மையப்பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றிற்கு சென்ற முதலமைச்சர், அங்கு பொருள்கள் வாங்கவந்த பொதுமக்களிடத்தில் கரோனா குறித்து அச்சப்பட வேண்டாம், கடைகள் எதுவும் மூடப்படாது என உறுதி கூறினார்.
இதனையடுத்து புதுச்சரி பேருந்து நிலையம், கோரிமேடு, கனகசெட்டிகுளம் உள்ளிட்ட புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிக்குச் சென்ற அவர், வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் கரோனா கண்டறிதல் சோதனை குறித்து ஆய்வுமேற்கொண்டார்.
மக்கள் ஊரடங்கு : பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்கும் புதுச்சேரி முதலமைச்சர்! ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ”பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி புதுச்சேரியில் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாக இருக்கிறார்கள். கரோனா குறித்து பயப்பட வேண்டாம், மாநில அரசு தீவிரமாகச் செயலாற்றிவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற 22ஆம் தேதி மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
புதுச்சேரியில் கரோனா முன்னெச்சரிக்கைக்காக 17.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், வெளிமாநிலப் பேருந்துகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. கரோனா குறித்து விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” எனத் தெரிவித்தார்.