ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டத்தின் துக்லி பகுதியில் உள்ளது பாஹிதிரை கிராமம். இந்த கிராமத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள செம்மண் நிலப்பரப்பில் வைரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் பருவமழை தொடங்கியதும் மண்ணில் புதையுண்டிருக்கும் வைரம் உள்ளிட்ட கற்கள் கிடைப்பது வழக்கம்.
செம்மண்ணில் வைரம்: மும்முரமாகத் தேடும் விவசாயிகள்! - விவசாயிகள்
ஆந்திரப்பிரதேசம்: குர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட சிலர் மண்ணில் வைரத்தை தேடும் பணியில் ஆவலுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்த வைரங்களை சேமிப்பதற்காக பல்வேறு மக்களும் இந்தப் பகுதிக்கு படையெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு கடந்தசில வருடங்களுக்கு முன் தேடலில் ஈடுபட்ட விவசாயி ஒருவருக்கு 17 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்தது. இது இந்த நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் அந்தக் கிராமத்தை நோக்கி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த தேடுதல் பணியில் ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாது பணக்காரர்களும்கூட களமிறங்கி இருப்பதுதான் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இதற்காக தங்களின் காரில் வரும் செல்வந்தர்களும் மண்ணில் இறங்கி தேடிவருகின்றனர். ஒரு வைரம் கிடைத்தால் போதும். சில நொடிகளில் பெரும் செல்வந்தர் ஆகலாம் என்ற எண்ணத்தில் எல்லோரும் வைரத்தை அங்கு மும்முரமாகத் தேடிவருகின்றனர்.