சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் காவல் துறையினரின் உதவியுடன் மருத்துவரின் உடல் புதைக்கப்பட்டது.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது குறித்து பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவ சங்கத்தினரும் தங்களது வேதனையைத் தெரிவித்துவந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 21 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது ட்விட்டரில், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம்செய்ய தனது கல்லூரியின் ஒரு பகுதியைத் தருவதாக அறிவித்தார். இந்த அறிவுப்புக்குப் பலரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில், தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அவரவர் சமூகத்துக்கான மயானத்திலேயே அடக்கம்செய்வது மறுக்கப்பட்டால், அவர்களை தங்கள் கல்லூரியின் நிலத்தில் அடக்கம் செய்யலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இந்த அறிவுப்பு அற்புதமானது, உன்னதமானது" என்று பதிவிட்டுள்ளார்.