தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இயக்குநர் வெற்றிமாறன் மீதான தேச துரோக வழக்கு: யார் இந்த ஏபி சாஹி? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரைத்த பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹியின் (ஏபி சாஹி) பின்னணி குறித்த சிறு தொகுப்பு...

AP Sahi profile

By

Published : Oct 17, 2019, 5:25 PM IST

Updated : Oct 17, 2019, 5:45 PM IST

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்ய மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு சம்மதிக்காத தஹில் ரமாணி, தன் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அக்கடித்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏகே மிட்டலை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. தற்போது, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏபி சாஹியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. யார் இந்த அமரேஸ்வர் பிரதாப் சாஹி என்பதை காண்போம்...

2004ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஏபி சாஹி பதவியேற்றபோது

1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்த சாஹி, 1985ஆம் ஆண்டு வழக்கறிஞர் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் செப்டம்பர் 6ஆம் தேதி வழக்கறிஞராக அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். அங்கு பணியாற்றிக்கொண்டே சிவில், அரசியலைமைப்பு ஆகிய பிரிவுகளில் பயிற்சி பெற்றார். இப்பயிற்சியே 2004ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றிய அதே நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகும் வாய்ப்பை சாஹிக்கு பெற்றுத் தந்தது. பின்னர் 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாகவும் அவரை உயர்த்தியது.

இது தவிர, பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆலோசகராகவும் இருந்தார். பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்ஆர் ஷா உச்ச நீதிமன்ற நீதிபதியானபின், 2018ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாஹி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி பதவியேற்றபோது

2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வுபெறப் போகும் சாஹியை, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் குழு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவார் அமரேஸ்வர் பிரதாப் சாஹி.

நாட்டில் சிறுபான்மை மக்கள் கும்பல் வன்முறையாளர்களால் தாக்கப்படுவது குறித்து இயக்குநர் வெற்றிமாறன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 திரைத்துறையினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை தேச துரோக வழக்காக பதிவு செய்வதற்கு அனுமதியளித்த நீதிபதிதான் ஏபி சாஹி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 17, 2019, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details