கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்றின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. இந்தத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், இதுவரை இந்தத் தொற்றுக்கு யாரும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தை இன்று வெளியிடவுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், "அறிவியல்பூர்வமான ஆதரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தொற்றுக்கான முதல் ஆயுர்வேத மருந்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், பதஞ்சலி உருவாக்கியுள்ள மருந்தைக் கொண்டு கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை ஐந்து முதல் 14 நாள்களுக்குள் குணப்படுத்திவிட முடியும் என்று பால்கிருஷ்ணா கூறியிருந்தார்.