இந்தியாவில் பாஜக கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் வெறுப்புவாத பேச்சுக்கு எதிராக நடவடிக்களை எடுக்க பேஸ்புக் நிர்வாகம் மறுப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு ஆஜராகும்படி பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று(செப்.2) பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அஜித் மோகன் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு ஆஜரானார்.
திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணை சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பேஸ்புக் நிறுவனத்தில் தற்போது முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பலரும் இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணியாற்றியது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்த பாஜக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதேபோல, ஏன் பல வெறுப்புவாத பேச்சுகளை பேஸ்புக் இன்னும் நீக்காமல் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக பேஸ்புக் இந்திய பிரிவின் தலைவர் அஜித் மோகன், கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனும் அதன் பின் யுபிஏ அரசுடன் பணியாற்றியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அஜித் மோகன், தான் ஆலோசனை வழக்கு ஓர் நிறுவனத்தில் தொழில் ரீதியாக பணியாற்றிதாகவும் எந்தவொரு கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார். வெறுப்புவாத பேச்சுகள் நீக்கப்படாமல் இருப்பது குறித்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த பேஸ்புக், சர்வதேச அளவில் எந்த மாதிரியான கொள்கைகளை பின்பற்றுகிறார்களோ அவைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்தது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப பிரிவின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக மீண்டும் கலந்தாலோசிக்க ஒருமனதாக ஒப்புக்கொண்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி வரும் செப்டம்பர் 10ஆம் நாடாளுமன்ற விசாரணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. இருப்பினும், செப்டம்பர் 12ஆம் தேதியுடன் இக்குழுவின் பதவிகாலம் நிறைவடையவுள்ளதால் இது குறித்து சில உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னதாக சசி தரூர் தனது கட்சியின் கொள்கைகளை நாடாளுமன்ற நிலைக்குழுவில் திணிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டி, அவரை நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக நாடாளுன்ற உறுப்பினர்கள் சிலர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு