பேஸ்புக்கில் பாஜக தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதமான பேச்சுக்கு எதிராக அந்நிறுவனம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என, முன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, புகழ்பெற்ற வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், இந்தியாவில் பணிபுரியும் பேஸ்புக் உயர்மட்ட அலுவலர்கள், பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக செய்தி வெளியானது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, பேஸ்புக் நிர்வாகிகள் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், பேஸ்புக் நிர்வாகிகள் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.