அதிக மதிப்புள்ள இந்திய ரூபாயின் போலி நோட்டுகள் பரிமாற்றத்தைத் தடுக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது பற்றி நாடாளுமன்றக் குழு ஒன்று, 16-10-2019 அன்று விவாதித்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவரும், காங்கிரஸ் உறுப்பினருமான சுப்பராமி ரெட்டி, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட சில அரசு அதிகாரிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியெண்டல் வணிக வங்கி, அலகாபாத் வங்கிகளின் முக்கியத் தலைவர்கள், சிபிஐ அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் அதிக மதிப்பு வாய்ந்த ரூபாய் நோட்டுகளான 500, 2000 ரூபாய் நோட்டுகளின் போலி நோட்டுகளைப் பற்றி இந்தக் குழு அதிகம் விவாதித்துள்ளது. மேலும் உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களையெல்லாம் தாண்டி இந்த ரூபாய் நோட்டுகள் எவ்வாறு பிரதி எடுக்கப்படுகின்றன என்பது பற்றியும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் இந்தக்குழு விவாதித்துள்ளது.