கோவிட்-19 அச்சுறுத்தலை காரணம் காட்டி குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனை விமர்சித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னா, “ பூட்டிக்கிடப்பதற்கு ஏன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படுகிறது ?” என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கோவிட் -19 பரவல் அதிகரித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இரண்டு நாள்களாக குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு மகாராஷ்டிரா பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
ஆனால், குளிர்கால கூட்டத்தொடரை மத்திய பாஜக அரசு முற்றும் முழுதாக ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஜனநாயகப் படுகொலை குறித்து மகாராஷ்டிரா பாஜகவினர் வாய் திறக்கவில்லை. ஜனநாயகம் குறித்த பாஜகவினரின் கருத்துக்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாறும்போல. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ரத்து செய்த பாஜகவினர்தான் மகாராஷ்டிராவில் கோயில்களை மீண்டும் திறக்க வேண்டுமென போராடினர். இதனை ஒரு வகையான பாசாங்கு என்றுதான் சொல்ல வேண்டும்.
குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் கலந்துரையாடியதன் அடிப்படையில்தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். அந்த கூட்டம் எங்கு நடத்தப்பட்டது, யாரெல்லாம் அதில் பங்குகொண்டனர் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா ?