உத்திரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரிலுள்ள பிக்கி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வசீம் மற்றும் அவரது மனைவி நஸ்மா. இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்து இருபது நாட்களே ஆன அஃப்ரின், அஃபியா என்ற தங்களது இரட்டை குழந்தைகளைக் காணவில்லையென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வசீம் வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் இரண்டு சிசுக்களும் சடலமாக மீட்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வசீம், நஸ்மாவிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் குழந்தையை திட்டமிட்டே குளத்தில் வீசியதும், தொடர்ந்து குழந்தைகளைக் காணவில்லை என நாடகமாடியதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் கூறுகையில், ‘எங்களுடைய குடும்பப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே ஏழு வயதிலுள்ள எனது மகனுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துவருகிறோம். இந்நிலையில், இரட்டை குழந்தைகளை வளர்க்க எங்களால் முடியாது என்பதால்தான் குழந்தைகளைக் கொன்றோம்.
இரட்டைக் குழந்தைகள் பிறந்ததிலிருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தது. கருத்து வேறுபாடுகள் முற்றியதில் கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் குழந்தைகளைக் குளத்தில் வீசினோம்’ என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து யாரும் கேள்வியெழுப்பக்கூடாது என்பதற்காகவே காவல் நிலையத்தில் குழந்தைகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.
இதையும் படிங்க: பிறந்தவுடனே சாக்கில் கட்டி வீசப்பட்ட பெண் சிசு உயிரிழப்பு!