பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கியது. டெல்லி வன்முறை, கொரோனா போன்ற விவகாரங்களை முன்வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கொரோனா குறித்த விவாதம் நடைபெறும்போது, ராஜஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று காகிதங்களை தூக்கி எறிந்தனர். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.