மருத்துவ புரட்சியால் நவீன காலத்தில் வாழும் மக்கள் பயனடைந்துவருகின்றனர். இருப்பினும், கரோனா வைரஸ் நோய் அவர்களை அச்சுறுத்திவருகிறது. சிறப்பான மருந்துகள், மருத்துவர்கள் இருந்தபோதிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரிழந்துவருகின்றனர். இப்படி இருக்கையில் மருத்துவ வசதி இல்லாத அக்காலத்தில் மக்கள் எப்படி தொற்று நோயை கட்டுப்படுத்தினர் என்ற கேள்வி எழுகிறது. வாழ்க்கை, வாழ்வாதாரம், நாட்டையே அழிக்கும் பாக்டீரியா, வைரஸிலிருந்து மக்கள் எப்படி தப்பித்தார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இம்மாதிரியான நோய் தொற்றுகள் உலகிலிருந்து எப்படி முழுவதுமாக அழிந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
மனித வரலாற்றில் மிகக் கொடிய நோய்களில் ஒன்று பிளேக். கி.பி. 541 இல் கிழக்கு ரோமானிய பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்டாண்டிநோபிளில்தான் முதன்முதலாக இந்த நோய் தாக்கியது. எகிப்திலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக இந்நோய் மற்ற கண்டங்களுக்கு பரவியது. மருத்துவ வசதியில்லாத அந்த காலகட்டத்தில் இந்த நோய் பாதிக்கப்பட்டு மூன்று முதல் ஐந்து கோடி வரையிலான மக்கள் உயிரிழந்து இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. கி.பி. 541 முதல் 750 வரையிலான காலகட்டத்தில் பல நாடுகளை உலுக்கிய இந்த பிளேக் நோய் காலபோக்கில் அழிந்தது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்கள் இந்நோயிலிருந்து தப்பித்தாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதற்கு ஜஸ்டினியன் பிளேக் என்ற பெயர் உள்ளது.
ஜஸ்டினியன் பிளேக் நோய்க்கு காரணமான யெர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு புபோனிக் பிளேக் என்ற பெயரில் மீண்டும் மக்களை பாதித்தது. கருப்பு மரணம் என்ற பெயரும் இதற்கு உண்டு. 1347ஆம் ஆண்டு ஐரோப்பிய கண்டம் முழுவதும் இந்நோய் பரவியது. நான்காண்டுகளில் கோடி கணக்கான மக்கள் இந்த புது விதமான பிளேக் நோயால் உயிரிழந்தனர். இதற்கான சரியான சிகிச்சையை மக்கள் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்டவரிடமிருந்து இந்நோய் பரவுகிறது என்பதை மக்கள் பின்னர் அறிந்து கொண்டனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட மக்கள் நாடு கடத்தப்பட்டனர். ரோமானிய துறைமுகங்களில் ஆட்சியாளர்கள் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். 40 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட மாலுமிகள் நாட்டில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அறிகுறிகள் இல்லை என தெரியவந்ததைத் தொடர்ந்துதான் அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.