ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று (ஆக. 9) சிறிய ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், “பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் பகுதியில் காலை 6.45 மணி அளவில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது. சிறிய ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முன்னதாக, ஆகஸ்ட் ஏழாம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பொனியார் பகுதியில் பாகிஸ்தான் இதேபோல் மற்றொரு தாக்குதலை நடத்தியது. அதற்கு முன் ஆகஸ்ட் ஆறாம் தேதி, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகிலுள்ள மந்தர் துறையில் போர் நிறுத்தத்தை மீறி, சிறிய ஆயுதங்கள், குண்டுகளை பயன்படுத்தி தாக்கினார்கள்.
தவிர, தற்போது போலவே கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பூஞ்ச் மாவட்டம், மான்கோட் பகுதியில் இரவு ஏழு மணி அளவில் தாக்குதல் நடத்தினார்கள். ஏற்கனவே அங்கு பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து போர் நிறுத்த விதிமுறைகளை மீறி 2,720 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல்களால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர், 97 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், தங்களது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.