குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரு படகுகளில் அரபிக் கடலில் சர்வதேச எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத் துருப்புகள் திடீரென இந்திய மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் இந்திய மீனவர் ஒருவர் காயமுற்றார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது குறித்து துவாரகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகன் ஆனந்த் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்12) மாலை எங்களுக்கு இது தொடர்பாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் சம்பவப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று பாகிஸ்தான் துருப்புகள் பிடித்து வைத்திருந்த இரண்டு படகுகளையும் விடுவித்தனர். பாகிஸ்தான் படைகள் சுட்டத்தில் இந்திய மீனவர் காயமுற்றார்.
புதிய கரோனா வைரஸான கோவிட்-19 ஐ எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுக்க 21 நாள்கள் பூட்டுதல் (லாக் டவுன்) அமலில் உள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு குஜராத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.