டெல்லி: அவமதிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும் தண்டனை விவரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஆக.25) மீண்டும் விசாரித்தது.
அப்போது, “பிரசாந்த் பூஷண் போன்ற மூத்த வழக்குரைஞர்கள் சொல்வதை மக்கள் உண்மையென நம்புவார்கள். வேறு யாராவது இவ்வாறு கூறினால் புறக்கணிப்பது சுலபம்” என்றனர்.
நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், அரசியல்வாதிக்கும், சட்டப் பிரதிநிதிக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. தனது ட்வீட்களை நியாயப்படுத்தும், பிரசாந்த் பூஷணின் பதில்கள் வேதனை அளிக்கின்றன” என்றார்.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், 2009ஆம் ஆண்டில் இதே போல் நடந்த மற்றொரு வழக்கையும், அந்த வழக்கில் இன்னமும் தண்டனை வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.
அண்மையில் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி குறித்து ட்விட்டரில் இரு கருத்துகள் பதிவிட்டார்.
இந்தக் கருத்துகள் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் உள்ளதென அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அவதூறு வழக்கை பதிவு செய்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி!