பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷேகுபுரா மாவட்டத்தில் ரயில்வே கிராஸிங்கில் நின்றுகொண்டிருந்த மினி பஸ் மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த மினி பேருந்தானது சீக்கிய பக்தர்கள் 29 பேரை ஏற்றிக்கொண்டு, பஞ்சாபில் நங்கனா சாஹிப்பிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது.
இச்சமயத்தில் கராச்சியிலிருந்து லாகூரை நோக்கி ஷா உசைன் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, லெவல் கிராஸிங்கில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது, விரைவில் ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில், 19 சீக்கியர்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், "சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானில் உயிரிழந்த செய்தியை கேட்டு மன வேதனை அடைந்தேன். இச்சமயத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சீக்கியர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.