கரோனா சூழலை கருத்தில் கொண்டு பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது. மார்ச் 26ஆம் முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான ஐந்தே நாள்களில் 3,076 கோடி ரூபாய் குவிந்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதில், 3,075.85 கோடி ரூபாய் உள்ளூர் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 39.67 லட்சம் ரூபாய் வெளிநாட்டிலிருந்து வந்த நன்கொடை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்க முன்வருபவர்கள் குறைந்தபட்சம், பிம் கேர்ஸ் நிதியில் 2.25 லட்சம் செலுத்தியாக வேண்டும். நன்கொடையாக பெறப்பட்ட நிதியின் மூலம் 35 லட்சம் ரூபாய் வட்டி கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிட்டபோதிலும், வழங்கியவர்களின் பெயர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதியின் நன்கொடையாளர்களின் பெயரை வெளியிட காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மார்ச் 26ஆம் முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான ஐந்தே நாள்களில் 3,076 கோடி ரூபாய் நிதி நன்கொடையாளர்கள் மூலம் பிஎம் கேர்ஸ் நிதியில் பெறப்பட்டுள்ளது. இதை தணிக்கையாளர்களே உறுதி செய்துள்ளனர்.
ஆனால், பெருந்தன்மை வாய்ந்த நன்கொடையாளர்களின் பெயரை ஏன் வெளியிடவில்லை? நன்கொடையாளர்களின் விவரத்தை வெளியிட மற்ற அரசு சாரா அமைப்பு மற்றும் அறக்கட்டளை கடமைபட்டிருக்கும்போது, பிஎம் கேர்ஸ் நிதிக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்க வேண்டும்?நன்கொடையாளர்கள் யார் என அறக்கட்டளை (அரசு) நன்கு அறியும். இந்த நிலையில், நன்கொடையாளர்கள் பெயரை வெளியிட அரசு ஏன் அஞ்சுகிறது? " என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரஷ்ய பயணத்தில் சீன அமைச்சரை சந்திக்கிறாரா ராஜ்நாத் சிங்?