நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் பின்பற்றப்பட்ட கரோனா தடுப்பு முறையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படும் முழு அதிகாரத்தையும் அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இது மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை தடுத்தது மட்டுமின்றி கஞ்சம் மாவட்டத்திற்கு பெரும் உதவியாக அமைந்தது.
அதுமட்டுமின்றி முதலமைச்சர், கஞ்சம் மாவட்டத்தின் கோவிட் நிர்வாகத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வந்தார். அவ்வப்போது கஞ்சம் மாவட்ட அலுவலர்களுடன் கலந்துரையாடி கரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். மே மாதத்தில் கரோனா அதிகம் பாதித்த குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து சுமார் 5 லட்சம் பேர் கஞ்சம் மாவட்டத்திற்கு திரும்பிய சமயத்தில், நோய் பரவலை தடுக்க அதிகப்படியான மருத்துவர்களும், சுகாதார துறை ஊழியர்களும் கஞ்சம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர்.
முன்னதாக, உலக சுகாதார அமைப்பும் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் கோவிட் தடுப்பு நிர்வாகத்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.