இந்தியாவில் கரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 31 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
நேற்று புதிதாக 5,609 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 3,435 பேர் உயிரிழந்த நிலையில், 45,300 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,03,532 மாதிரிகள் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது. இன்று (மே 21) காலை எட்டு மணிக்கு வெளியான தகவலின்படி நாட்டில் இதுவரை 26,15,920 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.