கரோனா வைரஸ் பரவல் காரணமாக உச்ச நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் காணொலிக் காட்சி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையால் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காணொலி காட்சி விசாரணையை கைவிடக்கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு, 500 வழக்கறிஞர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனுப்பியுள்ள கடித்ததில், " காணொலி காட்சி விசாரணை முறை தோல்வியடைந்த ஒன்றாகும். பல நீதிமன்ற கிளைகள் சரியாக பதிலளிக்காத காரணத்தால், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் நிலுவையில் உள்ளன. பிணை வழக்குகளும் விசாரிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதால், வழக்கறிஞர்களால் மக்களுக்கு உதவ முடியாத நிலைமை உள்ளது.
மெய்நிகர் நீதிமன்ற விசாரணையில் பல குறைபாடுகள் உள்ளன. சில சமயங்களில் இணைய சேவை வேகம் குறைவாக இருக்கிறது. பதிவேட்டில் முறையான மேலாண்மை இல்லை. எனவே, காட்சி விசாரணையை கைவிட்டுவிட்டு நேரடி விசாரணை முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.