உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.
அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜையை சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் முயற்சிப்பதாக, ஏற்கனவே மத்திய புலனாய்வு அமைப்புகள் மாநில காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர, பாஜகவின் முக்கிய தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டிலுள்ள முக்கிய தொழிலதிபர்களும் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.