உலகில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு செல்போனுக்கும் பிரத்யேகமாக ஒரு ஐ.எம்.இ.ஐ.(IMEI - International Mobile Equipment Identity) எண் ஒதுக்கப்படும். பொதுவாக குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களின் செல்போனை இந்த ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டு தான் காவல் துறையினர் கண்டுபிடிப்பார்கள்.
ஒரு செல்போனில் ஒதுக்கப்பட்ட 14 இலக்கம் கொண்ட ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டு மற்றொரு செல்போனை தயாரிப்பது என்பது சட்டப்படி குற்றம். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் விதிமுறைகளுக்கு மாறாக, ஒரே ஐ.எம்.இ.ஐ. எண்ணில் 13,500 மொபைல்கள் உருவாக்கிய தொழிற்சாலை மீது சைபர் பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள காவலர் ஒருவர், தனது ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்யாததால், சைபர் பிரிவு காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது ஸ்மார்ட்போனை பரிசோதித்த சைபர் பிரிவு காவலர், அதே ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டு 13 ஆயிரத்து 500 செல்போன்கள் உருவாக்கப்பட்டதைக் கண்டறிந்து அதிர்ந்துவிட்டார்.