கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே ஆகியோரோடு உயர்மட்ட அரசு அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில், ''கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. அங்கு பரிசோதனைகள் அதிகமாக்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். கரோனா வைரஸ் எந்த இடத்தில் அதிகமாகப் பரவுகிறது என்பதை அறிந்து வேகமாகச் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலி மூலம் ஹாட் ஸ்பாட்களை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
சுகாதாரத் துறை அமைச்சகத்தின் முதன்மையான குறிக்கோள், இந்தியாவில் இறப்பு விகிதத்தைக் குறைப்பதுதான். இந்தியாவைப் பொறுத்தவரையில் 10 லட்சம் பேரில் 538 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதேபோல் 15 பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர். கரோனா வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே இந்தியாவிலதான் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.