மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
விவிபேட் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!
டெல்லி: பிரச்னை ஏற்பட்டால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான அனைத்து வாக்குகளையும் ஒப்புகைச் சீட்டு கருவிகளுடன் சரிபார்த்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள், ஒரு வாக்குச்சாவடியை சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் வேறுபட்டால், அந்த சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்த்த பின்தான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன.
இந்த விவகாரம் பற்றி இன்று ஆலோசித்த தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகளில் உள்ள ஒப்புகைச் சீட்டு கருவிகளுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபார்த்து தேர்தல் முடிவு நாளை அறிவிக்கப்பட உள்ளது.