பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளை அவர் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாடிவருகிறார். குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள குருதேஷ்வர் தத் கோயிலில் வழிபாடு நடத்தினார். முன்னதாக பிரதமர் மோடி சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டு அங்கு நீரில் மலர்தூவி பிரார்த்தனை மேற்கொண்டார்.
பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். அந்த வகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், நல்ல ஆரோக்கியத்துடன், தொடர்ந்து பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நல்ல உடல்நலத்துடன் நீண்டநாள் வாழ இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதே போன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.