பாட்னா: ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், “கரோனா அல்லது வெள்ளம் இரண்டுமே எதிர்க்கட்சிக்கு கவலை அளிப்பவை அல்ல. அவர்கள் முதலமைச்சர் நிதிஷ் குமாரைத் தாக்கி தங்கள் தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்கள்.
மாநிலத்தில் அழிந்து வரும் சுகாதார உள்கட்டமைப்பை நாங்கள் எவ்வாறு மீட்டு கொண்டு வந்தோம் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டும். தொற்றுநோயை சமாளிக்க மட்டுமல்ல, வெள்ளத்தை சமாளிக்கவும் பேரழிவு மேலாண்மை திட்டங்களை திறம்பட கையாண்டுவருகிறோம்.
பிகாரில் வெள்ளத்தின் நிலைமை கவலை அளிக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அதை சமாளிக்க மாநில அரசு தயாராக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.
ராகுல் காந்தி கேள்விக்கு பதில்
இதையடுத்து மாநிலத்தில் கோவிட் -19 தொடர்பான மரணங்கள் குறித்து ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ரஞ்சன், “பிகார் குறித்து கருத்து தெரிவிக்கும் முன் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலைமையை ராகுல் காந்தி கவனிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “காங்கிரஸ் ஆதரிக்கும் மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு நாட்டில் நாட்டில் நான்கில் ஒரு பங்காக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் பெரும்பான்மை மாநிலங்கள் இதனை கவனிக்க தவறியுள்ளன. இருப்பினும் அவர் பிகார் குறித்து கருத்து தெரிவிக்கிறார். நாட்டின் பழைமையான ஒரு பெரிய கட்சியின் மூத்தத் தலைவராக அவர் உள்ளார். கோவிட்-19 ஐ சமாளிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் என்ன மாதிரிகளை பின்பற்றுகின்றன என்பது குறித்து பேச வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது” என்றார்.