உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், டிசம்பர் 10ஆம் தேதி வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர்.
அதன்பின் அப்பெண்ணை உயிருடன் தீவைத்து எரித்தனர். பின்னர் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் முதலில் லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பெண்ணை எரித்த ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்குப் போராடிய அப்பெண் டிசம்பர் 11ஆம் தேதி 11.40 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டதை எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.