நீண்டகாலமாக இந்தியா, சீனா இடையே லடாக்கில் எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. அவ்வப்போது இருநாட்டு ராணுவப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இருதரப்பு வீரர்களும் காயமடைவர்.
கடந்த வாரமும் லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்து இரு நாட்டு வீரர்கள் குவிக்கப்பட்டனர். பின்னர் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து பதற்றம் தணிந்தது.
இந்நிலையில், நேற்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் இருநாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.
இதற்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், பிரதமர் தொடர்ந்து மெளனம் காத்துவருகிறார். இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், "நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாம் பெரிய கடன்பட்டிருக்கிறோம். இம்மாதிரியான சூழலில் தாங்க இயலாத வேதனையில் இருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு நன்றி கலந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் அவர்களுக்கு வலிமையையும் துணிவையும் அளிக்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா, "லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு தலைவணங்கும் இந்நேரத்தில், பிரதமர் நாட்டிற்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தகுந்த பதிலடி தர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஒளிந்து கொண்டிருப்பது ஏன்? - மோடிக்கு ராகுல் கேள்வி