ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களுக்கு, மாரச் 26ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, மத்தியப் பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சி மாறியதால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால், கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக, மாநிலங்களவைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததற்கு பாஜகவின் குதிரை பேரமே காரணம் என காங்கிரஸ் கட்சியினர் தற்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதேபோல் ராஜஸ்தானிலும் பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதி அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்களை ஜெய்ப்பூரிலுள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து மாநிலங்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.