மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக வரும் 15ஆம் தேதி கேரள மாநிலத்தில் பரப்புரை மேற்கொள்ள அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவிவரும் நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் அமித் ஷாவுக்கு புதிய விதத்தில் எதிர்ப்பினைக் காட்ட திட்டமிட்டுள்ளது.
அமித் ஷா வருகைதரும் நேரத்தில் அவருக்கு கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பைக் காட்ட ஒரு லட்சம் பேர் தயாராக உள்ளதாக இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானநிலையத்திலிருந்து, அமித் ஷா பரப்புரை மேற்கொள்ளும் மைதானம் நெடுகிலும் கறுப்பு உடை அணிந்த தொண்டர்களை திரளாக நிறுத்திவைக்கப் போவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆரம்பம் முதலே தீவிர எதிர்ப்பு காட்டிவரும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், அச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் மோடி திடீர் ஆலோசனை