அதிகரிக்கும் மாசு காரணமாக இந்தியா தூய்மையான எரிசக்தி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நேற்று (செப்டம்பர் 8) சர்வதேச சோலார் கூட்டணி நாடுகள் (ஐஎஸ்ஏ) சார்பில் நடத்தப்பட்ட முதல் உலக சோலார் சக்தி தொழில்நுட்ப உச்சி மாநாட்டு விழாவில் பேசிய பியூஷ் கோயல், "தூய்மையான ஆற்றலை உருவாக்கும் பணியில் இந்தியாவின் சிறப்பு என்னவென்றால், நாங்கள் ஒரு கூட்டு மனநிலையுடன் செயல்படுகிறோம்.
அனைத்து துறைசார்ந்த குழப்பங்களையும் தீர்த்து, எங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு தூய்மையான எதிர்காலத்தை வழங்க ஒருவருக்கொருவர் ஆதரவளித்து உழைத்துவருகிறோம்.
உலகை ஒரு தூய்மையான மற்றும் சிறந்த வாழ்க்கையை நடத்தும் ஒரு இடமாக மாற்ற சூரிய ஆற்றல் முக்கியமானது. இதை உற்பத்தி செய்ய புதிய தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். நாம் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லும்போது, நமது ஆற்றல் தூய்மையாக வைத்திருப்பது மட்டுமே நமக்கான ஒரே வழி. நாளை நமது குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய இது முக்கியம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 745 ஜிகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் அதிக தேவை உள்ள காலங்களில் பிற நாடுகளுக்கு இந்தியாவால் மின்சாரத்தை வழங்க முடியும்.