அஸ்ஸாம் மாநிலத்தின் பாக்ஜானில் மொத்தம் 23 எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. இதில் பாக்ஜான் 5ஆம் எண் எண்ணெய்க் கிணற்றில், கடந்த மே 27ஆம் தேதி கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கசிவு காரணமாக எண்ணெய்க் கிணறு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தீ 50 நாள்களை கடந்து நேற்றும் (ஜூலை15) எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசித்துவந்த ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 13 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் அப்பகுதியில் மக்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழல், வன விலங்குகள் என அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து பொதுத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடந்த 50 நாள்களாக பற்றி எரியும் தீயை, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அணைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.