ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள எலுரு பகுதி மக்கள் கடந்த 5ஆம் தேதி முதல் வாந்தி, தலைவலி, மயக்கம், வலிப்பு, மறதி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சிலர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பினும், தொடர்ந்து மக்கள் இந்தப் புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.இதுவரை இந்த நோயால் 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய நோய் தொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்தியாவின் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
நோயாளிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் காரியம், நிக்கல் அதிகளவு இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நச்சு காரணமாகவே அவர்களுக்கு இதுபோன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.