நாம் வாழும் பூமியை பசுமையாக பார்த்துக்கொள்வது நமது கடமையாகும். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் பல நூற்றாண்டுகால பாராம்பரியத்தைக் கொண்ட மரங்களை ஒரே நொடியில் வேரோடு சாய்த்துவிட்டு, நாம் கட்டடங்கள் கட்டுகிறோம். தற்போது, இதற்கு எதிராக பல்வேறு பசுமை அமைப்புக்கள் குரல் எழுப்பி வருகின்றன. மரங்களின் அவசியத்தை மக்களுக்கு இந்த அமைப்புகள் உணர்த்தி வருகின்றன.
ஆனால், இதுபோன்று குழுவாக செயல்படும் அமைப்புகளால் மட்டுமே இவை சாத்தியம் எனக் கருதாமல், தனி ஆளாகக் களத்தில் இறங்கி, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை இந்த கரோனா காலகட்டத்தின் மத்தியில் நட்டு வரும் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஒடிசா மாநிலம், அங்கூல் மாவட்டத்தின் புதபங்கா கிராமத்தில் பிறந்தவர் கீதாஞ்சலி சமல். இவர் தாவரவியல் படிப்பில் உயர் கல்வி முடித்துள்ளார். இவரின் கணவர் கிஷோர் குமார் வங்கி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். தற்போது, கீதாஞ்சலி சாகர் வித்யாபித் என்ற பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தங்களது பள்ளி வளாகத்திலேயே இவர் பல்வேறு வகையான மரங்களையும் நட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தக் கரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் தன் சொந்த ஊருக்குத் திரும்பிய கீதாஞ்சலி, அங்கும் மரம் நடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், அங்கூலின் பல்வேறு இடங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அவர் நட்டுள்ளார்.