இது தொடர்பாக ஒடிஸா காவல்துறைத் தலைவர் (டிஜிபி) அபயா கூறுகையில், "அங்குல், சம்பல்பூர், தியோகர், நாயகர், பௌத் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மேம்பட்ட பாதுகாப்பு நிலைமையை அங்கீகரிக்கும் வகையில் இடதுசாரி பயங்கரவாதம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டதை அறிவிக்கும் விதமாக ஒடிஸா அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. வலுவான பாதுகாப்பு வழங்குவதோடு அங்குள்ள மக்களின் வாழ்கை முன்னேற்றத்திற்கான கவனம் செலுத்தி வளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கவும், ஒடிஸாவின் மாதிரியாக சில ஆண்டுகளில் இப்பகுதிகளின் நிலைமையை மாற்ற இருக்கிறோம்" என தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த ஐஜிபி (ஆபரேஷன்) அமிதாப் தாக்கூர், "2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜஜ்பூர், தெங்கனல், கியோன்ஜார், மயூர்பஞ்ச், கஜபதி, கஞ்சாம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டன. இந்த மாவட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பான செலவு (எஸ்.ஆர்.இ) திட்டத்திலிருந்து நீக்கப்பட்டன.
மாறிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்போது ஒடிஸா அரசு அங்குல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை எஸ்.ஆர்.இ திட்டத்திலிருந்து நீக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆகையால், ஒடிசாவின் மொத்தம் 11 மாவட்டங்கள் இதுவரை இரண்டு ஆண்டுகளில் மாவோயிச நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டுள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் மாநில அரசின் நல்லாட்சியின் தாக்கம் காரணமாகவே, மாவோயிச செல்வாக்கிலிருந்து இந்த பகுதிகள் வெளிவந்துள்ளன. மாநில அரசின் வளர்ச்சிக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதையும், வழக்கற்று போன மாவோயிச சித்தாந்தத்தின் மீது மக்களின் மோகம் குறைந்து வருவதையும் இது சுட்டிக்காட்டுகிறது" என அவர் கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல்பாரிகளின் செல்வாக்கு காரணமாக ஒடிஸாவில் உள்ள 30 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் எஸ்.ஆர்.இ மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எஸ்.ஆர்.இ என்பது நாடு முழுவதும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திறன் மேம்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மத்திய திட்டம் ஆகும்.