ஒடிசாவை புரட்டிப் போட்ட ஆம்பன் புயலினால் பாதித்த மாவடங்களை வான்வழியாக பார்வையிட்ட பிரதமர் மோடி, பாதிப்புக்கு ஏற்றார்போல நிவாரணத்தை அறிவித்தார். பின்னர், முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒடிசா ஆளுநர் கணேஷி லால் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதில், புயலால் சேதமான மாவட்டங்களை சீரமைக்க பிரதமர் மோடி ரூ. 500 கோடியை முன் - நிவாரணத் தொகையாக அறிவித்தார்.
இது குறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.ஜெனா வெளியிட்ட ட்வீட்டில், “உள்துறை அமைச்சகம் 24 மணி நேரத்திற்குள் ஒடிசாவுக்கு நிவாரணம் அளித்துள்ளது. பிரதமரின் அறிவிப்புக்கு நன்றி” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆம்பன் புயலால் பாதித்த கடலோர பகுதியிலுள்ள 10 மாவட்டங்களையும், மாநிலத்தின் வடக்கு பிராந்தியங்களையும் மறுசீரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் பி.கே.ஜெனா தெரிவித்தார்.
இது குறித்து ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 19 குழுக்கள், ஒடிசா பேரிடர் துரித நடவடிக்கை படையைச் சேர்ந்த 12 குழுக்கள், தீயணைப்பு படையினரின் 156 குழுக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவதால் விரைவில் மின்சார இணைப்புகள் சீரமைக்கப்படும். ஜகத்சிங்பூர், கேந்திரபுரா, பத்ரக், பலாசொர் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 44 லட்சத்து 44 ஆயிரத்து 896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு லட்சம் கோடி வேண்டும் - மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்