ஒடிஸா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பாதம்தாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் மஹூர் திபிரியா. விவசாயியான இவர், தனது நிலத்திற்கு அருகில் வளமான நீர்நிலைகள் ஏதும் இல்லாததால் தனது பயிர்களை செழுமையாக வளர வைக்க என்ன செய்யலாம் என சிந்தித்த இவருக்கு வந்த யோசனைதான் மூங்கில் மரக்கம்பை பயன்படுத்தி நீர்பாசனம் செய்யும் முறை.
இதில் திபிரியா, மின்சாதன பொருளை பயன்படுத்தாமல் முழுக்க இயற்கை முறையிலேயே பாசனம் செய்கிறார். இதனால் இவர் மட்டுமல்லாது, இவர் நிலத்திற்கு அருகிலுள்ள நில உரிமையாளர்களும் பயன்பெறுகின்றனர்.
எப்படி சாத்தியம்?
இந்த புதுமையான பாசன முறையில் ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்பு வைக்கப்படுகிறது. ஆற்றின் பக்கவாட்டில் சாய்வான கட்டமைப்பில் மூங்கில் மரத்தாலான பாசன கருவி வைக்கப்படுகிறது. சக்கரங்கள் பொருத்தப்பட்ட அந்த அமைப்பு சுழலும் போது, அதில் பொருத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் நீர் எடுக்கப்படுகிறது. பின்னர் அது வயலுக்குள் பொருத்தப்பட்ட குழாய்களுக்குள் நீரைச் செலுத்தும் வண்ணம் மிகவும் புத்திசாலித்தனமாக திபிரியா அந்த அமைப்பை அமைத்துள்ளார். மூங்கில் ராட்டினம் போல இருக்கும் இந்த அமைப்பின் மூலம் செழிப்பான விவசாயம் செய்யமுடிகிறது.
பாசனத்திற்கான புதுமையான வழி இது குறித்து விவசாயி திபிரியா கூறுகையில், ”நான் ஒரு ஏழை விவசாயி, என்னிடம் பணம் இல்லை. விவசாயத்திற்கு தேவையான தண்ணீருக்காக பலமுறை அரசு அலுவலர்களிடம் மனு அளித்தேன். ஆனால் அவர்கள் யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. எனவே, எனது சொந்த முயற்சியால் ராட்டினம் போல் சுழலும் இந்த பாசன கருவியை வடிவமைத்தேன்” என்றார்.