ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டிலும் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்தபடி நுழைந்த திருடன், துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை பையில் அள்ளிப்போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
இதுகுறித்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருடன் அதே வங்கிகளுக்கு வாடிக்கையாளராக வந்த போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதையடுத்து, அந்நபரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
கிடைத்த தகவலின்படி, கைது செய்யப்பட்ட நபர் டாங்கிபாண்டா பகுதியைச் சேர்ந்த சவுமியாரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் கொள்ளையடித்த இரண்டு வங்கிகளிலும் சுமார் 19 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அதில், 6 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தியுள்ளார். இந்நிலையில், கரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கால் மிகவும் வறுமைக்கு சென்றதால், பணத்தேவை அதிகமாகியுள்ளது. வங்கிகளுக்கு பணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், சினிமா பாணியில் வங்கியை கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்துள்ளார்.
அதற்காக, யூடியூப்பில் வீடியோ பார்கையில் பொம்மை துப்பாக்கி வைத்தே எளிதாக மக்களை ஏமாற்ற முடியும் எனத் தெரிந்துகொண்டு, அதை உபயோகித்தே செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், செப்டம்பர் 28ஆம் தேதி பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலும் சுமார் 12 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளார்.
பின்னர், சாதாரண வாடிக்கையாளர் போல் வங்கியில் சிறிய தொகை செலுத்தினால் சிக்கிக்கொள்ள மாட்டோம் என்ற நினைப்பில், 60 ஆயிரம் ரூபாயை செலுத்த வங்கிக்கு வந்துள்ளார். ஆனால், திருடுபோன பணத்தின் சீரியல் நம்பர் வங்கியிடம் இருக்கும் என்பதை அறியாததால், எளிதாக காவல் துறையிடம் சிக்கி கொண்டுள்ளார்.
அவரிமிருந்து 10 லட்சம் ரூபாய் பணமும், கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் பொம்மை துப்பாக்கியை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.