நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அளப்பறியது. இந்திரா காந்தி முதல் நிர்மலா சீதாராமன் வரை அரசியல் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் தங்களுக்கான அடையாளத்தை பெண்கள் தக்க வைத்துள்ளனர். பெண்கள் தடம்பதிக்காத துறையே இல்லை என்ற வகையில், இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆராய்ச்சி, காவல்துறை, கணினி தொழில்நுட்பம், அரசியல் என அனைத்து துறைகளிலுமே பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. சாதனை பெண்மணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதே இன்றி குறையவில்லை.
அந்த வகையில், 23 வயதே ஆன இளம் பெண் ஒருவர் இன்று இந்திய பெண்களின் எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணான அனுபிரியா லக்ரா என்பவர் தனது லட்சியத்தில் உறுதியாக இருந்து இன்று அம்மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர், பள்ளிப் படிப்பை முடித்து விட்டுச் சுமார் 6 ஆண்டுகள் தனியார் விமானக் கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அதே போல் அங்குள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பையும் முடித்துள்ளார். விமானப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அனுபிரியா விரைவில் துணை விமானியாக தனது பணியைத் தொடங்கவுள்ளார்.