நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் குறைந்தபட்ச வருமானத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிக்கும் திட்டம் நாட்டில் வறுமையில் உள்ள 20 சதவிகித மக்களை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்படும். இந்தியில் நியாய் திட்டம் தமிழில் ஏழைகளுக்கு நீதி என்று அழைக்கப்படும்.
இந்த திட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் நாட்டிலுள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும். ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 5 பேர் என்று எடுத்துக்கொண்டால், இதில்25 கோடி மக்கள் பயன்பெறுவர். காந்தியின் கனவை நினைவாக்கும் வகையில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும். இது குறித்து பல பொருளாதார நிபுணர்களிடமும் நாங்கள் ஆலோசித்துவிட்டோம். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இதனை செயல்படுத்த முடியும் எனத்தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற திட்டத்தை அமல்படுத்த முடியாது. ஆனால் தற்போது அந்த நிலையில்லை.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவால் முடியும். இது படிப்படியாக சோதனை முறையில் அமல்படுத்தப்படும். இது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அவர்களது ஆலோசனையுடன் செயல்படுத்தப்படும். நாட்டின் பொருளாதார சூழல் உள்ள நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமே. நாங்கள் இதற்கு முன் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தியபோதும் இதேபோல்தான் சாத்தியமில்லை என்று தெரிவித்தனர். ஆனால் அதை வெற்றிகரமாக அமல்படுத்தினோம் அதேபோல் இந்த திட்டத்தையும் அமல்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.