இன்றைய குழந்தைகளை நாளைய திறமையான மனித வளங்களாக மாற்றுவதற்காக, ஒரு சீரான உணவு மிகவும் முக்கியமானது. ஆனால் உலக ஊட்டச்சத்து குறியீடுகளில் இந்தியா தொடர்ந்து குறைந்த இடத்தில் உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு முழுமையான மற்றும் போதுமான ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக மத்திய அரசு 2018 மார்ச் மாதம் போஷான் அபியான் (தேசிய ஊட்டச்சத்து திட்டம்)-தை அறிமுகப்படுத்தியது.
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், அரசாங்கம் இந்த ஆண்டும் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறினார்.
இதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தினை, பருப்பு வகைகள், பால், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு முக்கியத்துவம் அளித்து உணவுமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவு பற்றிய விரிவான பட்டியலை கவுன்சில் வழங்கியது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மையான இந்தியர்களுக்கு சத்தான உணவுகள் சரிவர கிடைப்பதில்லை.
கடந்த காலங்களில், தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு குழந்தைகளில் வைட்டமின், அயோடின், துத்தநாகம், ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளை மதிப்பிடுவதற்காக நாடு முழுவதும் இருந்து 1,12,000 இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை சேகரித்தது. அதில் பலவீனம், மெலிதல் மற்றும் எடை குறைவாக இருப்பதை அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. தற்போதுள்ள தொற்றுநோய் வேலையின்மை மற்றும் பட்டினி துயரங்களை மேலும் அதிகரித்திருப்பதால், ஏழைமக்கள் ஆரோக்கியமான உணவைப் பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2017, தனது அறிக்கையில் இந்திய பெண்களில் 51 விழுக்காடு பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 19 கோடி இந்தியர்களுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. நமது குறைபாடான உணவுகளால் நாட்டின் மக்கள்தொகையில் 70 விழுக்காடு மக்களுக்கு உறுதியான தசை இல்லை. தேசிய அபிவிருத்தி திட்டத்தில் ஊட்டச்சத்தை கொண்டு வர, நிதி ஆயோக் ஒரு தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை வெளியிட்டது. இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை சுதந்திர இந்தியா உருவானதிலிருந்தே தொடரும் ஆபத்துகளாக இருக்கின்றன.
நீர்நிலைகள் மாசுபாடு காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் நாடாப்புழு தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆரோக்கியமான உணவுகள் கிடைக்காததால் 14 முதல் 49 வயது வரையிலான பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுகிறது. ஆயோக்கின் திட்டங்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் மூல காரணங்களை அடையாளம் கண்டிருந்தாலும், உண்மையான நிலைமையை மேம்படுத்துவதற்கு மிகக் குறைந்த அளவு நடவடிக்கை மட்டுமே எடுக்க முடிந்தது.
கோவிட்-19 ஏற்கனவே ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை அழித்துள்ள நிலையில், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பசி ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கி, மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
இதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்கி ஆதார விலைகளை அவர்களுக்கு வழங்கி ஆதரவளிப்பதன் மூலம் தடையற்ற விநியோகச் சங்கிலியை கொண்டிருக்கும். மேலும், முழுமையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய அங்கன்வாடி மையங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.