இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதனிடையே டெல்லியில் செயல்பட்டு வரும் ஹெச்ஏஹெச் மருத்துவமனையில் பணி செய்து வந்த 84 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர் குஃப்ரானா கட்டூன், டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஹம்டார்ட் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் குஃப்ரானா கட்டூன் (Gufrana Khatoon). இவருக்கு ஜூலை 3ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனிடையே கரோனா அறிகுறி காணப்பட்டும் அவருக்கு இலவச கரோனா பரிசோதனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதியன்று, மருத்துவமனை நிர்வாகம் சார்பாக 84 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த பணிநீக்க ஆணையில், ''அனுமதியின்றி விடுப்பு எடுத்தல் மற்றும் விடுப்பு பற்றி மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறியப்படுத்தவில்லை'' என்று காரணம் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இவர்களில் பலரும் ஜூலை 11ஆம் தேதி வரை பணியில் இருந்ததாகவும், சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், '' கரோனா வார்டுகளில் பணிசெய்யும் சுகாதார பணியாளர்கள் பலருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கரோனா வார்டுகளில் பணிபுரியும் அனைவருக்கும் என்-95 முகக்கவசம், சுத்தமான குடிநீர், இலவச கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்திக் கொள்ளவதற்கான பிரத்யேக அறைகள் ஆகியவற்றை கேட்டதால் தான் நாங்கள்பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.