பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா-ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இது அரசால் அளிக்கப்படும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த முயற்சி பலரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்தியதோடு, அவர்களின் நல்ல ஆரோக்கியத்திற்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் மோடி தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் முயற்சியினாலேயே இந்தத் திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக அமைந்துள்ளது எனப் பெருமிதம் தெரிவித்தார்.