கர்நாடகாவுக்கு 7 புது அமைச்சர்கள்: இன்று பொறுப்பேற்பு:
கர்நாடக பாஜக அரசின் மூன்றாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறுகிறது. புதியதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் வி.ஆர். வாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து 18 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், அமைச்சர்கள் மொத்தம் 27 பேர் உள்ளனர். இன்னும் 7 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய கட்சி மேலிடம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இன்று(ஜனவரி 13) பிற்பகல் 3.50 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தீவிரம்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், மாணவியை பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தி, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவத்தில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சி.பி.ஐ., மீண்டும் நடத்திய விசாரணையில், ஹெரோன்பால், பாபு, பொள்ளாச்சி நகர அதிமுக., மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் ஆகியோர் கடந்த, 6ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஹெரோன்பாலிடம் விசாரிக்க, இரண்டு நாட்கள், காவலில் எடுத்தனர். பின், அவரை சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு அதனையடுத்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில், சி.பி.ஐ., டி.எஸ்.பி., ரவி தலைமையில் நேற்று முன்தினம்(ஜன.11) நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். நேற்றும்(ஜன.11) விசாரணை நடந்தது. இன்று காலை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்துகின்றனர். மேலும் யார், யாருக்குத் தொடர்புள்ளது என்பது பற்றி சி.பி.ஐ.,யிடம் ஹெரோன்பால் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் இன்று திரையரங்குகள் திறப்பு!
உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனாவால் கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று கேரளாவில் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கேரள திரைப்பட வர்த்தக சபையின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், திரையரங்குகளைத் திறக்க வர்த்தக சபை ஒப்புதல் அளித்துள்ளது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் அங்கு திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வெளியிட்ட அறிவிப்பில், "குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால், இன்று ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை வரை பெய்யும். தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், பெரும்பாலும் மிதமான மழையும் பெய்யும். நாளை புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். வரும் 15 மற்றும், 16ஆம் தேதிகளில், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சிலப் பகுதிகளில், லேசான மழையும் பெய்யும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள 'மாஸ்டர்'
நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், இன்று வெளியாக உள்ளது. விஜய்யின் மற்ற படங்களுக்கு இல்லாத வகையில், மாஸ்டருக்கு மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. கரோனாவுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் முதல், பிரபல ஹீரோவின் படம் 'மாஸ்டர்' என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.