குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
டெல்லியில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் கடந்த 13ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஜாமியா நகரில் நடைபெற்ற போராட்டம் சற்று தீவிரம் அடைந்ததால் மதுரா, நியூ ஃபிரண்டஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளின் போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் மூன்று அரசு பேருந்துகள், இரண்டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் காவல்துறையினர் தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாணவர் சங்கம் களத்தில் இறங்கியதால், டெல்லியில் பதற்றம் நிலவி மெட்ரோ சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.