கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியா-சீனா இடையே எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையே கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து பிரச்னை தீவிரமடைந்ததால் இருதரப்பு ராணுவமும் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அமைதியை நிலைநாட்ட விருப்பம் தெரிவித்து இருதரப்பும் படையை பின்வாங்க முடிவெடுத்தன.
இந்நிலையில், லடாக்கின் சூசுல் பகுதியில் உள்ள பாங்கோங் ஏரியருகே சீன ராணுவம் அத்துமீறல் நடத்தியதாகவும், அதை இந்திய ராணுவம் முறியடித்தாகவும் தெரிவிக்கப்பட்டது.
கல்வான் தாக்குதலின் தீவிரம் தற்போது ஓய்ந்து வரும் நிலையில், எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த பாதுகாப்பு அலுவலர்களுடன் இன்று (செப்.1) அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அஜித் தோவல் ஆலோசனையில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு 50 பில்லியன் யென் அவசர கடனுதவி வழங்க ஜப்பான் அரசு ஒப்புதல்!