திருவனந்தபுரம்: கேரள போக்குவரத்துக் கழகம் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அது என்னவெனில், இனி திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கானவும், பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காகவும் அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பதே.
திருமணத்திற்குப் பிறகான ஃபோட்டோஷூட்டுகளுக்காக இரண்டு அடுக்கு பேருந்துகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. இதற்கான வாடகை மக்கள் ஏற்கும் விதத்திலே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எட்டு மணி நேரத்திற்கு நான்காயிரம் ரூபாய் நிர்ணயித்தது மட்டுமல்லாமல், திருவனந்த புரத்தில் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு எங்கு வேண்டுமானாலும் பயணித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.
இந்த அறிவிப்பு தனித்துவமானதாக மட்டுமல்லாமல், புதிய ட்ரெண்டுகளை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இணைய தளத்தில் வெளிவரும் பெரும்பாலான புகைப்படங்கள், வீடியோக்கள் கிராமப்புரங்களில் எடுக்கப்பட்டவையாக அமைகிறது. எனவே, புதுவிதமான ஃபோட்டோஷூட்களை விரும்பும் நபர்கள் கேரள போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
வாடகை பேருந்துகளின் விவரம் இந்த அறிவிப்பு வெளியானவுடன் வரும் ஜனவரி 18ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ள தம்பதிகள் சேவ் தி டேட் இணையதளத்தின் மூலம் இரண்டு அடுக்கு பேருந்தினை முன்பதிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து கழகத்தின் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் கோழிக்கோடு, கொச்சி போன்ற இடங்களிலும் விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் அலுவலர்கள். மேலும், போக்குவரத்துக் கழகம் ஃபோட்டோஷூட்டிற்கு தேவையான பிற சேவைகளையும் வழங்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.