நாட்டில் வேகமாகப் பரவும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில், பல நாட்டின் முன்னணி விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, கரோனா வைரஸைக் குணப்படுத்தும் என கொரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த மருந்தை உபயோகித்தால் 7 நாள்களுக்குள் கரோனாவிலிருந்து குணமடைந்து விடலாம். 100 விழுக்காடு மக்கள் குணமடைந்துவிட்டதாக விளம்பரம் செய்தனர்.
இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, உடனடியாக ஆயுஷ் அமைச்சகம் கொரோனில் மருந்திற்கு தடை விதித்தனர். கரோனா பரிசோதனைக்கு உபயோகிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர். இந்த மருந்தை விற்பனை செய்பவர்கள் மீது கடும் தண்டனை எடுக்கப்படும் எனவும் ராஜஸ்தான் சுகாதாரத்துறை சார்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட பதஞ்சலி மருந்தை ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் உபயோகித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ராஜஸ்தான் சுகாதாரத்துறையினர் உரிய விளக்கம் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் நரோட்டம் சர்மா கூறுகையில், "மூன்று நாள்களுக்குள் விளக்கம் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்த மருந்தை உபயோகிப்பது தொடர்பாக தகவல்களையும், அனுமதியும் மருத்துவனை நிர்வாகம் மாநில அரசிடம் பெறவில்லை" எனத் தெரிவித்தார்.