ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறத்தப்பட்டது. ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவினால் பலர் பசியால் வாடி இறந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களிடம் பேசியபோது, தாங்கள் உணவிற்காக சாலையில் திரிகிறோம். பசியால் வாடி வருகிறோம் தங்களுக்கு யாராவது உணவு வழங்குவார்களா என்று சாலையில் செல்பவர்களை நம்பிக்கையோடு பார்த்துவருகிறோம் எனக் கூறுகின்றனர்.
மாநில நிர்வாகம் கொடுத்துள்ள அவசர உதவி எண்களுக்கு தங்களுத் தேவையானவற்றை கூறி பல நாள்களாகிவிட்டது. இதுவரை அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து ஒரு பெண் கூறுகையில், “எங்கள் குடும்பத்தினர் பசியால் வாடிவருகின்றனர். வீட்டினுள்ளே இருப்பதில் எவ்வித பலனும் இல்லை. எங்கள் பசியை போக்கவேண்டுமென்றால் இங்கு நின்று யாராவது வழங்கும் உணவை எடுத்துச் சென்று குடும்பத்தார்களுக்கு வழங்கவேண்டும்” என்றார்.
உணவிற்காக காத்திருக்கும் மக்கள் மேலும், ஒருவர் கூறுகையில், “எனது மனைவியும், குழந்தையும் வீட்டில் உள்ளனர். நாங்கள் நன்றாக சாப்பிட்டு பல நாள்களாகிவிட்டன. சாலையில் இருந்தால் யாரேனும் உணவு வழங்குவார்கள் என நம்பிக்கை உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார்.
ஊரடங்கால் கரோனா ஒழிந்துவிடும் என்று எதிர்பார்க்கும் நிலையில் பசியால் பொதுமக்கள் ஒழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்ணுக்கு உணவூட்டிய பெண் காவல் அலுவலர்!